காரிமங்கலம் அருகே சொந்த நிதியில் உபரிநீர் கால்வாயை தூர்வாரிய பொதுமக்கள்
காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே பொதுமக்கள் தங்களது சொந்த நிதியின் மூலம் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி அணை உபரிநீர், பூலாப்பட்டி ஆறு மற்றும் கால்வாய் மூலம், ஜம்பேரி உள்பட 10 ஏரிகளுக்கு செல்கிறது. இந்த ஏரியின் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்தும் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, தொடர் மழை காரணமாக தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் பூலாப்பட்டி ஆற்றில் திறந்து விடும் சூழ்நிலையில், உபரிநீர் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரிகளுக்கு சீரான முறையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் புகும் அபாயம் உள்ளதால், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், திமுகவை சேர்ந்த கோவிலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சென்னகேசவன் தலைமையில் மொளப்பனஅள்ளியை சேர்ந்த விவசாயிகள் சக்திவேல், நாகராஜ், ஆறுமுகம், முருகன், அன்பு ராஜலிங்கம், ராஜா, பச்சையப்பன், விக்ரம், செந்தில்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள், தங்களது சொந்த நிதியின் மூலம் பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலத்தில் இருந்து, ஜம்பேரி ஏரி வரை கால்வாயில் படர்ந்திருந்த முட்புதர்கள் செடி, கொடிகள் ஆகியவற்றை அகற்றினர்.