ஒட்டு கேட்பு கருவி வைத்தது யார்? போலீசிடம் தெரிவித்து விட்டோம்: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
இதையடுத்து அவரது வீட்டில் கடந்த 3 நாட்களாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஒட்டு கேட்கும் கருவியை ராமதாஸ் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், வன்னியர் சங்கத்தின் 46ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், காரல் மார்க்ஸ், பெரியார் சிலை அருகே கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, அன்புமணி உள்பட பாமகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகள், மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘வன்னியர் சங்கத்தின் 46வது ஆண்டு துவங்குகிறது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும் என நான் கூறி வருகிறேன். போராட்டம் யார் நடத்தினாலும் வாழ்த்துக்கள் தான். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார். பின்னர், ‘ஒட்டு கேட்பு கருவியை காவல்துறை விசாரணைக்கு கேட்டபோது நீங்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தனியார் ஏஜென்சி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஆராய்ச்சி செய்து முடித்ததும் காவல்துறையிடம் ஒப்படைப்போம். காவல்துறையினரும் இதுபற்றி இப்போது விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்’ என்றார். ‘உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘சந்தேகங்கள் இருக்கிறது. யார் என்றும் காவல்துறைக்கு சொல்லி இருக்கிறோம்’ என்றார். ‘பூம்புகாரில் நடைபெறும் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுப்பீர்களா?’ என்றதற்கு, ‘எல்லோரும் வரலாம். யாரையும் வரவேண்டாம் என நாம் சொல்ல முடியாது. அவர்களும் வரலாம்’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.