கர்பா ஆடலாமா ?
தாண்டியா தெரியும். கைகளில் கோலாட்ட குச்சிகளுடன் வண்ணமயமான உடைகளில் ஆடும் நடனம். “ காதலர் தினம்” திரைப்படக் காலம் தொட்டு இது யாவரும் அறிந்த நடனம் தான். குச்சிகள் இல்லாமல் வாசிக்கப்படும் ரிதத்திற்கு ஏற்ப நடனம் ஆடுவது கர்பா. நவராத்திரி விழாக்களில் கூட்டம் கூட்டமாக இந்த நடனம் வட இந்தியாவில் ஆடப்படுவதுண்டு. ‘பத்மாவதி’ படத்தில் வரும் கூமரு பாடல், ‘தேவ்தாஸ்’ படத்தின் ‘டோலாரே’ பாடல், ‘கங்குபாய்’ படத்தின் டோலிடா அனைத்தும் கர்பா வகைகள் தான். இதன் நடனமும் தாண்டியாவை விடவும் இன்னும் அதீத நடன அசைவுகள் கொண்டது. மனம் விட்டு சிரித்து, முகம் மலர ஆட வேண்டிய நடனம் இது. சமீபத்தில் மெட்ரோ நகரங்களில் இந்த தாண்டியா நைட்ஸ், கர்பா நிகழ்வுகள், நவராத்திரி நடன பூஜைகள் என அதிகம் நடந்துவருகிறது. பொதுவாக இது வட இந்திய கலாச்சாரம் மற்றும் அவர்களின் பாரம்பரியம் எப்படி தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது. எல்லோரும் கர்பா ஆடலாமா? சொல்கிறார் வருடம் தோறும் தாண்டியா மற்றும் கர்பா நிகழ்ச்சிகள் நடத்தும் ஜின் ஷாலு.
‘‘கொரோனா காலத்துக்கு பிறகு ஏதாவது ஒரு காரணம் சொல்லி கூட்டமா கூடி சந்தோஷமா இருக்கணும் என்கிற மனநிலை அதிகமாகியிருக்கு. அதே சமயம் எல்லோராலும் பார்ட்டி, இரவு நேர பயணம், டான்ஸ் ஸ்டூடியோ என போக முடியாது. ஆனால் இது நவராத்திரி பூஜை , அதிலே நம்மூரு பாணியில் கும்மி பாட்டு நடனம் எனச் சொன்னா நிச்சயம் வீட்டிலும் ஓகே சொல்லிடுவாங்க. மேலும் அவங்களும் சேர்ந்து வர்றதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. பொதுவா இந்த மாதிரியான கூட்டமா சேர்ந்து மகிழ்ச்சியை பரிமாறிக்கிறதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவாங்க . ஆனால் இந்த காலத்திலும் பெண்களுக்கான கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யுது. குறைந்தபட்சம் வருஷத்துக்கு ஒரு தடவையாவது எல்லா மன அழுத்தங்களையும் விட்டுட்டு எல்லா பொறுப்புகளையும் மறந்து முக்கியமா தன்னை மறந்து டான்ஸ் ஆடணும். இதுக்கு தான் இப்போ இந்த தாண்டியா மற்றும் கர்பா நிகழ்ச்சிகள் அதிகமாகிட்டு வருது.எங்களுக்கே போன வருஷம் நடத்தின நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தை விட இந்த வருடம் அதிக ஆர்வம் பார்க்கறேன். குறிப்பா ஆண்கள், குடும்பங்கள் கிட்ட ஆர்வம் அதிகரிச்சிருக்கு. மேலும் நாங்கள் இதில் ஜும்பா நடனத்தையும் சேர்த்து கலந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேர உடற்பயிற்சி மாதிரி தான் நடனம் கொடுக்கிறோம்” தாண்டியா அல்லது கர்பா என்றாலே லெகங்கா உடைகள் அணிய வேண்டுமே. அதன் விலையும் அதிகம். எப்படி சாத்தியம்?’’ தொடர்ந்தார் ஷாலு.
‘‘வாடகை முறையில் உடைகள் நகைகள் வாங்கி அணிகிற பழக்கம் அதிகமாகிடுச்சு. அந்தந்த விழாக்களுக்கு ஏத்த உடைகளை வாடகைக்கு கொடுக்கிற கடைகளும் இருக்கு. ரூ. 600 கொடுத்தாலே லெகங்கா, அதற்கான நகைகள், காலணிகள் உட்பட வாங்கிக்கலாம். மேலும் ஒரு சில பெண்களுக்கு இடுப்பு பகுதி தெரியாமல் லெகங்கா தேவைப்படும். அவங்களுக்கும் ஏத்த லெஹங்காக்களை டிசைன் செய்து வாடகைக்கு கொடுக்கிறாங்க. லெகங்காவே வேண்டாம் என்றால் கூட புடவையை வட இந்திய ஸ்டைலில் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடலாம். ஒருவேளை நீங்க புதுசா லெஹங்கா வாங்கினால் கூட, நிகழ்ச்சி முடிந்த பிறகு அனார்கலி உடைகளா மாத்தி டிசைன் செய்துக்கலாம். அம்மன் திருவிழாவில் நடனம்... இது வட இந்தியாவில் மட்டும் கிடையாது நம்முடைய தென்னிந்தியாவிலும் கும்மி பாட்டாக நாம காலம் காலமா ஆடினதுதான். ஆதிகால வாழ்க்கையே எல்லா பூஜைகள், திருவிழாக்களில் நடனம் ஆடுறதுதான். அதிலே ஏன் தயக்கம். கேரளாவிலும் இதே போல பூஜை மற்றும் திருவிழா காலங்களில் கதக் நடனம் ஆடுறதுண்டு. எல்லா நடனங்களையும் பயிற்சி எடுக்காம ஆட முடியாது ஆனால் கும்மி, கர்பா, தாண்டியா, மாதிரியான டான்ஸ் 10 நிமிடம் பயிற்சி செய்தாலே போதும்.
நாமாகவே ஆட ஆரம்பிச்சிடுவோம். மேலும் இப்படித்தான் டான்ஸ் ஆடணும் என்கிற எந்த கட்டுப்பாடும் கிடையாது. யாரும் எப்படியும் இங்கே டான்ஸ் ஆடலாம். உடைகளும் கூட உங்க சாய்ஸ் தான். சிலர் சல்வாரையே கலர்ஃபுல்லா பயன்படுத்தி துப்பட்டாவை வட இந்திய ஸ்டைலில் அணியறாங்க. நல்ல அனார்கலி உடைகள் கூட அணியலாம். இதில் வெறும் டான்ஸ் மட்டும் இல்லை ஒன்பது நாட்களும் அம்மனுக்கான விரதம், பூஜை, பிரசாதங்கள் எல்லாமே இருக்கும். ஒரு சில தாண்டியா அல்லது கர்ப்பா நிகழ்ச்சிகளில் இரவு உணவும் சேர்த்து ஒரு கட்டணமா தலைக்கு இவ்வளவு அப்படின்னு வாங்கிக்கிறாங்க. இது சாதாரணமா ஒரு ஹோட்டலுக்கு போய் குடும்பமா சாப்பிடுகிற கட்டணத்தை விட குறைவுதான். மனசு லேசாகும், அழுத்தங்கள் குறையும், நாலு புது நண்பர்கள் கிடைப்பாங்க. ஜாலியா சந்தோஷமா கலர்ஃபுல் உடைகள்ல ஓரிரு நாட்கள் நமக்காக டான்ஸ் ஆடினால் என்ன தப்பு?” கேட்கிறார் ஜும்பா மற்றும் நடன பயிற்சியாளர் ஷாலு.
- ஷாலினி நியூட்டன்.