கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், கடந்த 2014ல் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் 2021ல் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.