ஒரு மாதமாக மூடப்பட்டு கிடக்கும் காரங்காடு அலையாத்திக் காடு படகு சுற்றுலா மையம்
* ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள்
* கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ராமநாதபுரம் : தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடு படகு சுற்றுலா மையம் ஒரு மாதமாக பூட்டியே கிடப்பதால், வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மீண்டும் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் மற்றும் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மணக்குடி என்ற கிராமத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காரங்காடு என்ற மீனவர் கிராமம்.
நிலப்பரப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சதுப்பு நிலத்தில் உப்புநீர் நிறைந்த கடலுக்குள் சுமார் 250 ஏக்கரில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அடர்ந்து வளர்ந்து காட்சியளிக்கிறது மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரக்காடுகள். அலையே இல்லாமல் அமைதியான சூழலில் கடலுக்கு நடுவே கரை போன்று இருபுறமும் அமைந்துள்ளது அலையாத்தி மரங்கள்.
இத்தகைய எழில் கொஞ்சும் இயற்கை அழகை ரசிக்க கடந்த 2017ம் ஆண்டு சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் சார்பில், பாதுகாப்பு கவச உடையுடன் கூடிய படகு சவாரி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்து வந்தது.
பயிற்சி பெற்ற உள்ளூர் மீனவ இளைஞர்கள் பாதுகாப்புடன் படகை இயக்குகினர். மாணவர்கள், சிறுவர்களுக்கு ஹயாக்கிங்க் எனப்படும் துடுப்பு படகு சவாரியும் இருந்தது.
மிதந்து செல்லும் படகு சவாரியின் போது அலையாத்தி காடுகளுடன், அங்கு கடல்புறாக்கள், பவளக்காலி, குதிரை தலை கோட்டான், நாரை, கொக்கு வகைகள், பிளம்பிங்கோ போன்ற பறவைகள் மெல்லிசை போன்ற ரீங்கார சத்ததுடன் பறந்தும், நீந்தி செல்வதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இதுபோன்று பிரத்யேகமான முகக்கண்ணாடி, மூச்சுவிடும் கருவிகள் வனத்துறையினரிடம் பெற்று கடல் அடியில் உள்ள நட்சத்திர மீன்கள், வண்ண மீன்கள், கடல் ஆமை, கடற்பாசி, புற்கள் உள்ளிட்ட அபூர்வமான அழகிய கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு மகிழ்வதற்கு, காடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடந்துகொண்டே சென்றும், கண்காணிப்பு உயர்கோபுரம் மேலிருந்து ஒட்டு மொத்த அழகையும் ரசிக்கலாம்.
இதனை பார்க்க உள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். மேலும் கல்வி சுற்றுலாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து சென்றனர்.இதனால் காரங்காடு கிராமம் மற்றும் சுற்றுலா தலம் களை கட்டி காணப்படுவது வழக்கம்.
இந்த சுற்றுலா மையத்தை வனத்துறையினருடன், காரங்காடு கிராமத்தினர் சேர்ந்து செயல்படும் வகையில் தலைவர், செயலாளர், பொருளாளர் என 8 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு படகுகளுக்கு நுழைவு கட்டணம் வசூல், டோக்கன் வழங்குவது, படகு இயக்குவது, பாதுகாப்பு பணி, ஓட்டல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றும் நடைமுறைப்படி கடந்த செப்டம்பர் 6ம் தேதி பணியாளர்களை மாற்ற வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பிற்கு பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாக கிராமத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக சுற்றுலா மையம் மூடப்பட்டது.
கடந்த வாரம் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, விஜயதசமி விடுமுறை என தொடர் விடுமுறைகள் வந்தது. இதுபோன்று ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டத்திற்கு வருகின்ற வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநில சுற்றுலா பயணிகள் காரங்காடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பராமரிப்பு செலவுகள், எரிபொருள் மற்றும் படகோட்டி கூலி போன்றவற்றிற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100, துடுப்பு படகு ஓட்ட ஒருவருக்கு ரூ.200, இருவர் என்றால் ரூ.300 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதன் மூலம் வனத்துறைக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. வாகனங்கள், மக்கள் அதிகமாக வந்து செல்வதால் கிராமத்தில் சிறு வியாபாரிகளும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் கிராமத்தினர் மட்டுமின்றி அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சுமூக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து காரங்காடு அலையாத்தி காடு சூழல் படகு சுற்றுலா மையத்தை மீண்டும் செயல்படுத்த கலெக்டர் மற்றும் மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.