கறம்பக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் 839 மனுக்கள் வந்தன
*உரிமை தொகை கேட்டு 179 மகளிர் விண்ணப்பம்
கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் 839 மனுக்கள் வந்தன. உரிமை தொகை கேட்டு மட்டும் 179 மகளிர் விண்ணப்பம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மலையூர் கிராமத்தில் உள்ள தனியார் மஹாலில் அரசு அறிவிப்பின்படி தமிழக முதல்வர் உத்தரவின்படி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிரான் விடுதி, வெள்ளாள விடுதி, வலங்கொண்டான் விடுதி, கருப்பட்டிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் நலன் பெறும் வகையில் நடைபெற்ற இந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமிற்கு புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ தலைமை வகித்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவபாஞ்சாலன் வரவேற்றார். மேலும் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரவி, கறம்பக்குடி தாலுகா தாசில்தார் ஜமுனா மற்றும் ஒன்றிய ஆணையர் நல தேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் செந்தில்குமார், தாலுக்கா தலைமையிடத்து துணை சிறப்பு தாசில்தார் பெரியநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 4 ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 839 மனுக்கள் வரப்பெற்றன. மகளிர் உரிமைத்தொகை கேட்டு மட்டும் 179 மனுக்கள் வந்தன.
குறிப்பாக பட்டா மாறுதல், கலைஞர் வீடு கட்டுதல், இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, 100 நாள் அட்டை என 87 மனுக்களுக்கு மேடையிலேயே தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறிப்பாக பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்திற்கும் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு 45 நாட்களுக்குள் உடனடியாக தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.