கண்ணமங்கலம் அருகே மலையடிவாரத்தில் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பு: அச்சம் வேண்டாம் என கப்பல் படை அதிகாரிகள் விளக்கம்
தற்போது இங்கு கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் ரோட்டரி விங் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமம் மலையடிவாரத்தில் பயிற்சி மையம் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் நிறைந்த அப்பகுதியில், போர்க்காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தாழ்வாக பறந்து மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று 2 ஹெலிகாப்பட்டர்களில் பைலட்டுகள் தாழ்வாக பறந்து பயிற்சி மேற்கொண்டனர். மேலும் ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு ஒரு ஹெலிகாப்டரில் இருந்து மற்றொன்றுக்கு ஆட்கள் மாறி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாகி பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கப்பல் படை அதிகாரிகள் கூறுகையில், ‘இது பைலட்டுகள் ஹெலிகாப்டரில் மேற்கொள்ளும் வழக்கமான பயிற்சிதான். இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை’ என்றனர். இதனை தொடர்ந்து கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது வழக்கமான கப்பற்படை ஹெலிகாப்டரில் மேற்கொள்ளும் வழக்கமான பயிற்சிதான். இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்று தெரிவித்தனர்.