கண்ணமங்கலம் அருகே மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் நேற்று மாடு விடும் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி கிராம தேவதைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பின்னர், பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க இளைஞர்கள் பரிசு பொருட்களுடன் ஊர்வலமாக வாடிவாசலை வந்தடைந்தனர். அங்கு, மாவட்ட காளை விடுவோர் நலச்சங்க கவுரவ தலைவர் மோகன் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து வீதியில் ரசிகர்கள் இடையே காளைகள் சீறிப்பாய்ந்தன. விழாவில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.80 ஆயிரம், 3வது பரிசு ரூ.60 ஆயிரம், 4ம் பரிசு ரூ.50 ஆயிரம், 5வது பரிசு ரூ.40 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.