காங்கயம் நகராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை வழிமுறைகள் மீண்டும் பின்பற்றப்படுவது எப்போது?
காங்கயம் : காங்கயம் நகராட்சி குப்பை கிடங்கில் விதிகளுக்கு புறம்பாக குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.
சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கிடங்கில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம், கசடு கழிவு மேலாண்மை, மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் குப்பைகளை தரம்பிரிக்கும் திட்டம், மருத்துவ கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு மேலாண்மை திட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக துவங்கப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கும் நிலையே இருந்து வந்தது. இதேபோல் தாராபுரம் சாலையில் உள்ள வெள்ளறை பாறை பகுதியில் உள்ள பாறைக்குழியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு திறந்த வெளியில் எரிக்கப்பட்டு வந்தது.
இதனால் இப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை நிறுத்தி முறையான திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சென்னிமலை சாலையில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த குப்பைகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக பயோமைனிங் செய்யப்பட்டு உரமாக்கி அகற்றப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
இதேபோல் காங்கயம் மார்க்கெட் பகுதியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. கசடு கழிவு மேலாண்மை திட்டம் மூலம் செப்டிக் டேங் கழிவுகள் பெறப்பட்டு பல்வேறு படிநிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு வீழ்ப்படிவாக கிடைக்கும் உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக காங்கயம் நகராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகள் தரம்பிரிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது. மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் சரிவர பிரிக்கப்படுவதில்லை. இறைச்சி கழிவுகளை விதிகளுக்கு புறம்பாக புதைத்து வருகின்றனர் எனவும், அருகாமை குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் இருந்ததை போன்ற நிலையே சில மாதங்களாக தொடர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து 2 மற்றும் 4வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சுமார் 4 மாதங்களுக்கு முன் நாப்கின்கள், மருத்துவமனை காகித கழிவுகள், துணி கழிவுகள் ஆகியவற்றை எரிக்கும் இயந்திரம் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இயந்திரம் தரமற்றதாக இருப்பதால் பெரிய டிரம்மில் குப்பைகளை போட்டு எரித்து வருகின்றனர்.
இந்த கழிவுகளோடு சில நேரம் பிளாஸ்டிக் கழிவுகளையும் போட்டு எரிப்பதால் இந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுவாசிக்க சிரமப்படும் சூழல் நிலவுகிறது. அதேபோல் இறைச்சி கழிவுகள் முன்பு உடுமலைபேட்டை பகுதிக்கு உரமாக்குவதற்கு அனுப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குப்பைக்கிடங்கு வளாகத்திலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புதைக்கப்படும் கழிவுகள் ஆழமான குழிகளில் புதைக்கப்படுவதில்லை. அவற்றின் மேல் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதில்லை.
இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தின் மேல் சரிவர மூடாமல் புதைக்கப்பட்ட இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்து சென்று தின்றதுபோக மீதியை சாலைகள் மற்றும் வீடுகளின் முன் போட்டு விட்டு செல்கின்றன. கோழி குடல் கழிவை காகங்கள் எடுத்து வந்து குடிநீர் தொட்டிகளில் போட்டு விடுகின்றன. தினமும் புகையோடும், துர்நாற்றத்தோடும் அவதிப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று ஆபத்து: இறைச்சி கழிவுகளில் மற்ற கழிவுகளை காட்டிலும் கோலிபார்ம், சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் வேகமாக பரவும். இதனால் வயிற்று போக்கு, நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மீத்தேன் மற்றும் கார்பன்-டை -ஆக்சைட் வாயுக்களை வெளியிடும் இந்த வகை கழிவுகளை கையாள பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
நகராட்சி நிர்வாகங்கள் ஆழமான குழிகளில் புதைப்பதன் மூலமான உரமாக்கல், பயோ- மெத்தனோலின், ரென்டரிங், எரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளை கையாள வலியுறுத்தப்பட்டு உள்ளது. கால்சியம் நிறைந்த இறைச்சி கழிவுகளை ஆழக்குழிகளில் புதைப்பதன் மூலம் 45 முதல் 50 நாட்களில் உரம் கிடைக்கும். இந்த வகை உரங்கள் விவசாயத்திற்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.