கந்தசஷ்டி திருவிழா 2வது நாளில் நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
*திரளான பக்தர்கள் தரிசனம்
நெல்லை : நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், சந்திப்பு சாலை குமரன் கோயில், டவுன் வேணுவன குமாரர் கோயில்,நெல்லையப்பர் ஆறுமுகர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களின் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
இதைத் தொடர்ந்து 2வது நாளான நேற்று காலையில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சாலை குமரன் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், டவுன் வேணுவன குமாரர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு ஹோமங்கள், மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில், சாலை சுப்பிரமணியர் கோ யில், பாளை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, குறிச்சி சொக்கநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, பாளை மேலவாசல் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா அக்.22ம்தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் இரவு 7 மணிக்குமேல் ஸ்ரீ சண்முகருக்கு திரி சதி அர்ச்சனையும் நடந்து வருகிறது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் வரும் 27ம்தேதி திங்கட்கிழமை மாலை நடக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு மேல் கல்யாண சுப்பிரமணியருக்கும், உற்சவருக்கும் 27 வகையான அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மேல் சிவன்கோயில் தெற்குத்தெரு, பழைய மதுரை பிரதான சாலை, பெருமாள் கோயில் அருகே, வேதமூர்த்தி- மந்திரமூர்த்தி இரட்டை விநாயகர் கோயில் வடக்கு பகுதி என 4 இடங்களில் அடுத்தடுத்து சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் (28ம் தேதி) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு மேல் வள்ளி- தெய்வானை சுப்பிரமணியர் திருக்கல்யாணமும், தொடர்ந்து சிறப்பு விருந்தோம்பலும் நடைபெறுகிறது.