இலஞ்சி திரு விலஞ்சிக்குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
தென்காசி: தென்காசி அடுத்த இலஞ்சி திரு விலஞ்சிக்குமாரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலையில் 5.50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை சுந்தரம் பட்டர், ஹரி பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். விழாவில் செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழு தலைவர் பூவையா, உறுப்பினர்கள் ராஜேந்திரன், கதிரவன், இசக்கி, இசக்கியம்மாள், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், கட்டளைதாரர் பூங்குன்ற வேலாயுதம், அதிமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம், திமுக பேரூர் செயலாளர் முத்தையா, பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், முத்து, சுப்பிரமணியன், திருவிலஞ்சிக்குமரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தீபாராதனைகள் நடக்கிறது. காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 27ம் தேதி மாலையில் 6.20 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 28ம் தேதி மதியம் 12 மணிக்கு மூலவர் முழுக்காப்பு தீபாரதனை நடக்கிறது. இரவில் 7.10 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 29ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.
30ம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் 11.40 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழு தலைவர் பூவையா, உறுப்பினர்கள் ராஜேந்திரன், கதிரவன், இசக்கி, இசக்கியம்மாள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.