காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் மைய பகுதியாக கருதப்படும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு, கவரை தெரு பகுதியில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணன் (22). இவர், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் எஸ்ஐ சந்திரசேகர் தலைமையிலான போலீசார்கள் சுரேஷ், குமரேசன் ஆகியோர், ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள பாலாஜி சினிமா தியேட்டர் பின்புறம் உள்ள முட்புதர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் சரவணன் என்பதும், சினிமாவுக்கு வருகின்ற நபர்களிடம் கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்ததாகவும் தெரிவித்தார். எனவே, சரவணனை கைது செய்த போலீசார், அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று பீரோ உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து, ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், சரவணனை மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்துக்குகொண்டு வந்து நடத்திய விசாரணையில், கடந்த 2 வருடங்களாக ஆந்திர மாநிலம் ஓஜி குப்பம் பகுதிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக பேக் செய்து ராஜாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சரவணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.