காஞ்சிபுரத்தில் 2 நாட்களில் நீர்நிலைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஏரி, ஆறு உள்பட பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 1ம் தேதி மாங்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவசங்கரன், அங்குள்ள நீர்நிலைகளில் தனது நண்பர்களுடன் இறங்கி குளித்தபோது வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் இன்று காலை காஞ்சிபுரம் அருகே சின்னய்யன்குளம் பகுதியில் சடலமாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார். அதேபோல் தாமல் ஏரியில் நேற்று மாலை டியூப் போட்டு குளித்த பாலா நீருக்குள் மூழ்கி பலியானார்.
அவரை காப்பாற்ற சென்ற மணவாளன் என்பவரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டதில் மாயமானார். காணாமல் போன மணவாளனின் சடலத்தை இன்று காலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதேபோல் கடந்த 2 நாட்களில் காஞ்சிபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.