40,756 கனஅடியாக குறைந்தது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 98,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 1.45 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் நேற்று காலை 1.05 லட்சம் கனஅடியாக சரிந்த நீர்வரத்து.
படிப்படியாக மாலை 4 மணி நிலவரப்படி 57,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 36,242 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 1 லட்சத்து 8,529 கனஅடியாக அதிகரித்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, 1 லட்சத்து 16,683 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காலை 8 மணிக்கு 1 லட்சத்து 14,098 கனஅடியாக குறைந்தது. மாலை 4 மணி நிலவரப்படி, 40,756 கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 75,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.