கமுதி அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 51 கிடாக்களை பலி கொடுத்து 5 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து
கமுதி : கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழாவில், 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராம எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில், ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி மண்ணெடுத்து பீடம் அமைத்தனர். பின்னர் மாலை அணிவித்து பொங்கல் வைத்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, 51 கிடாக்களை பலி கொடுத்தனர்.
தயார் செய்த சாதத்தை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு, நேற்று காலை சாத உருண்டை மற்றும் கறி விருந்து ஆண்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இங்குள்ள எந்தப் பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைப் பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று கறி விருந்து சாப்பிட்டு சென்றனர்.