ஜூலை 25ல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு!!
சென்னை :மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25ம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், திமுக சார்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் திமுக எம்பிக்கள் 3 பேரும் ஜூலை 25ம் தேதி பதவியேற்க உள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி துவங்க, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிடத்தக்கது.