கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு தர்மஅடி: மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி திவ்யா(23). இவர் 2வது பிரசவத்திற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 6ம் தேதி திவ்யாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து முதல் தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் உள்ள ஐசியு அறையில் திவ்யா சிகிச்சை பெற்று வந்தார்.
அதே வார்டில் குழந்தையை அவரது தாய் காந்தி, மாமியார் தங்கமணி ஆகியோர் பாதுகாப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தங்கமணி தூங்கி கொண்டு இருந்தார். காந்தி கழிவறைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் பச்சிளம் குழந்தையை தேடி வெளியே சென்றனர்.
அப்போது பெண் ஒருவர் கைக்குழந்தையை தூக்கிகொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மந்தைவெளி பகுதியில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்று மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பெண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
தகவலறிந்தது வந்த கள்ளக்குறிச்சி போலீசாரிடம் இளம்பெண்ணை ஒப்படைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பச்சிளங்குழந்தை கடத்தல் விவகாரத்தில், மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
* குழந்தையை கடத்தியது ஏன்?
கைதான இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சின்னசேலம் அருகில் உள்ள பாண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி(29) என்பதும், முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ராஜபாண்டியன் என்பவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது. ராஜபாண்டியன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். 2வது திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக கணவரிடம் லட்சுமி பொய் சொல்லியுள்ளார்.
பின்னர் அதனை உண்மையாக்குவதற்காக அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்று தனக்கு பிறந்ததாக கணவரிடம் தெரிவிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். லட்சுமிக்கு நடந்த முதல் திருமணத்தில் ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். அதில் மகள் மட்டும் லட்மியுடன் இருப்பதும் மகன் முதல் கணவருடன் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, குழந்தையை கடத்தி விற்க திட்டமிட்டுள்ளாரா? என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.