கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பேருந்தை மதுப்போதையில் இயக்கிய ஒட்டுனரால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பேருந்தை மதுப்போதையில் இயக்கிய ஒட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூச்சலிட்ட நிலையில் அரசு பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடினார். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 52 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற அரசு பேருந்தை எழிலரசன் என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் இந்த பேருந்து கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையின் மேல் ஏறி இறங்கி அதிவேகமாக சென்றதால் பீதி அடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு பேருந்து ஓட்டுநரிடம் வலியுறுத்தியும்,
பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அதிவேகமாக இயக்கியதால் பயணிகள் கூச்சலிட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அருகே ரோடுமாமந்தூர் பகுதியில் சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர் எழிலரசன் அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாற்று பேருந்து மற்றும் ஓட்டுநர் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பேருந்தின் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.