கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சித்தேரியில் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் (எ) சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 32 ஏக்கர் ஆகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரியில் மழைநீர் தேங்குகின்ற தண்ணீரை கொண்டு அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். பின்னர் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் சித்தேரியின் சுற்றுபுறம் பகுதியில் குடியிருப்பு வீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து வாய்க்கால் தூர்ந்துபோனது. மேலும் மழை நீர் சேகரித்து வந்த ஏரியானது தற்போது கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளின் கழிவு நீர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் சித்தேரியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
ஏரி வடக்கு பகுதியில் குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீரில் சுமார் 2 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பல வருடங்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் தற்போது ஏரி அசுத்தமான நிலையிலும், கடந்த 3 மாதங்களாக சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தேங்கி கிடக்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் இணைந்து சித்தேரி வாய்க்கால் சீரமைக்கப்பட்டன.
மேலும் சித்தேரி மதகு பகுதியில் மண் அடைப்புகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்து நேற்று முதல் சீரான முறையில் சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.