கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு
*விரைவில் பணி மதிப்பீடு
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த விரைவில் பணி மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால், தற்போது இந்த நிலை மாறி நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.இக்கோயிலுக்கு படிக்கட்டுகள், பாறைகள், கடப்பாரை படி, ஆகாயப்படி, ஏணிப்படி என கரடு முரடான பாதைகளை கடந்து பக்தர்கள் மலையேறி செல்ல வேண்டும்.
தற்போது அங்குள்ள பாதி மண்டபம் வரை குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், போதிய அளவிற்கு கழிவறை வசதி கிடையாது.
எனவே, பாதி மண்டபத்தில் இருந்து மலை உச்சி வரை குடிநீர் கொண்டு செல்லவும், மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை பக்தர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கழிவறை வசதி, மலையேறும் பாதையில் பக்தர்கள் ஓய்வறைகள் கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோரிடம் வலியுறுத்தி வருகிறார். மேலும், கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக பாதி மண்டபத்தில் இருந்து மலை உச்சி வரை குடிநீர் கொண்டு செல்லவும், மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, மலையேறும் பாதையில் ஓய்வறைகள் கட்டுவது ஆகியன குறித்து விரைவில் இந்து சமய அறநிலைத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது தொடர்ந்து, பர்வதமலையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.