கலைஞர் மகளிர் உரிமை தொகை பெண்களின் மருந்துகளுக்கான செலவுகளுக்கு உதவி செய்கிறது : லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வறிக்கை
லண்டன் : தமிழக அரசு மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சொந்த காலில் முன்னேறவும், யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமான திட்டமாக உள்ளது. இந்த திட்டமானது கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்படும்.
இந்த நிலையில், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் டிக்சன் பூன் சட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடம் கழித்து விருதுநகர், தர்மபுரி, கோவை, நாகை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதாக உள்ளது என தெரிவித்த அந்த ஆய்வறிக்கை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளில் 49 சதவீதம் பேர் தங்களின் அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக இதனை செலவழிக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளது. மேலும் இந்தத் திட்டம் பெண்களின் மருந்துகளுக்கான செலவுகளுக்கு உதவி செய்கிறது என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.