கலைஞர் நினைவு நாளையொட்டி முதல்வர் தலைமையில் நாளை சென்னையில் அமைதி பேரணி: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு தனி நலவாரியம், தனி துறை அமைத்து, அத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம் கொண்டு வந்தார். அத்துடன் வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு, உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி வழங்குதல், அரசு துறைகளில் பணிபுரிவோர்களுக்கு டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றினார்.
எனவே, கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவருகிறோம். இந்த நிலையில் அவரது நினைவு நாளான 7ம் தேதி (நாளை) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடக்கிறது. இதில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து, ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது இணைப்பு சக்கர (மொபட்) வாகனத்தில் பங்கேற்கின்றனர். இந்த பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முடிவுபெறும். பின்னர் அவர்கள் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்படும். இந்த பேரணியில் திமுக மாற்றுத்திறனாளிகள் மற்றும், மாற்று திறனாளிகள் சங்கத்தினரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.