காக்கிநாடா அருகே கரையை கடந்த ‘மோன்தா’ கனமழையால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பயிர்கள் சேதம்: 248 கிராமங்கள் இருளில் மூழ்கியது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நேரில் ஆய்வு
திருமலை: வங்கக்கடலில் ஏற்பட்ட `மோன்தா’ புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம், ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறி நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா-மசூலிப்பட்டினம் இடையே கரையை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதனால் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் நர்சிபட்டினம் அருகே மோன்தா புயல் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. புயல் கரையை கடந்தாலும் கோணசீமா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய நேற்றும் கனமழை பெய்தது. இந்த புயலால் நெல்லூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 23.7 செ.மீ. மழை பெய்தது. மோன்தா புயல் காரணமாக ஆந்திர மாநிலம் முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தது.
28,083 மின் கம்பங்களும், செல்போன் டவர்களும் சேதமடைந்தன. இதனால் 248 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. வாழை, தென்னை, மாமரங்கள் போன்றவை முறிந்து விழுந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை மழையால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். தொடர்ந்து பாபட்லா, பல்நாடு, கிருஷ்ணா, கோணசீமா, ஏலூர் மாவட்டங்களிலும் பின்னர் கார் மூலமும் மழையால் பாதித்த விளைநிலங்களை பார்வையிட்டார்.