காக்கிநாடா அருகே நள்ளிரவு கரையை கடந்தது ‘மோன்தா’- 110 கிமீ வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை
திருமலை: காக்கிநாடா அருகே நள்ளிரவு கரையை கடந்த மோன்தா புயல் கரையை கடந்தபோது 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பல ஆயிரம் ஹெக்டேரில் இருந்த பயிர்கள் சேதமாயின.வங்கக்கடலில் ஏற்பட்ட மோன்தா புயல், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா-மசூலிப்பட்டினம் இடையே நர்சிபட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. புயல் கரையை கடந்தாலும் கோணசீமா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இன்றும் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயலால் ஆந்திர மாநிலம் முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தது. 28,083 மின் கம்பங்களும், செல்போன் டவர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் 248 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கடலோர கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வாழை, தென்னை, மாமரங்கள் போன்றவை முறிந்து விழுந்துள்ளது. சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. அதேபோல் புயல் பாதிப்புகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.