ஆந்தைக் கிளி அல்லது காக்காப்போ (Kakapo (or) Strigops habroptilus)
ஆந்தைக் கிளி அல்லது காக்காப்போ ( kakapo அல்லது Strigops habroptilus) என்பது ஒரு பறக்காத பறவையாகத் தரையில் வாழக்கூடிய ஒரு இரவாடி வகையை சார்ந்தது. நியூசிலாந்தில் காணப்படக்கூடிய இவை மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பூனை மீசை போன்று வாயைச் சுற்றி முளைத்துள்ள ரோமங்கள் போன்ற இறகுகள், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள், பெரிய பாத அடிகளை உடையவை.
இவற்றின் இறக்கைகள் மற்றும் வால் ஒப்பீட்டளவில் குறுகிய நீளமுடையவை. இது உலகின் ஒரே பறக்கமுடியாத கிளியாக கருதப்படுகிறது. உடல் பருமன் கொண்ட இவை இரவு நேரங்களில் மட்டும் திரியக்கூடிய தாவர உண்ணிகளாகும். உலகில் நீண்டநாள் வாழும் பறவைகளில் ஒன்றாகும். சில கிளிகள் 120 ஆண்டுகள் வரைகூட உயிர் வாழும். உலகின் அதிக எடையுள்ள கிளி இனமும் இதுதான். இதன் எடை 4 கிலோகிராம் வரை இருக்கும். காக்காப்போ 64 செ.மீ நீளம் வரை இருக்கலாம். காக்காப்போ பகலில் மரம் மற்றும் தரையில் மறைவாகத் தங்கி, இரவில் தங்கள் உணவுகளைத் தேடுகின்றன.
காக்காப்போ என்ற பெயருக்கு மவுரி மொழியில் `இரவு கிளி’ என்று பொருள். காக்காப்போக்களால் பறக்க முடியாவிட்டாலும், தங்கள் வலிமையான கால்களைப் பயன்படுத்தி மரங்களில் ஏறவும், இறக்கைகளை விரித்து பாராசூட் போன்று குதித்து கீழே இறங்கவும் முடியும். ஆந்தையின் முகத்தைப் போல இருப்பதால் ஐரோப்பியர்கள் இதை `ஆந்தைக் கிளி’ என்று அழைத்தனர்.
ஆந்தையும், காக்காப்போவும் சில பழக்கங்களில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. உதாரணமாக, அவை இரண்டும் இரவு நேரங்களில் உணவைத் தேடும். ஆனால் காக்காப்போ, ஆந்தையை போல இல்லாமல் தாவர வகைகளையே உட்கொள்கின்றன. தாவரங்கள், பழங்கள், விதைகள், மகரந்தம், பூக்கள் மற்றும் வேர்த்தண்டு கிழங்குகள் ஆகியவையே இவற்றின் பிரதான உணவு. பெண் பறவை 4 முட்டைகள் வரை இடும். மரத்தின் தண்டுகளில் துவாரங்கள் இட்டு கூடு கட்டுகிறது. பெண் பறவை முட்டைகளை அடைகாத்து, 30 நாட்களுக்குள் குஞ்சு பொரிக்கும்.
நியூசிலாந்தின் பல பறவை இனங்களைப் போலவே, ஆந்தைக்கிளியும் மாவோரி பழங்குடி மக்களின் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக, பாரம்பரியப் புனைவுகள் மற்றும் நாட்டுப்புற வியலில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. இவை இந்தப் பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு பல வகையில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் இம்மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.