கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை தூர்வாரி சீரமைப்பு
உடுமலை : உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடை உடுமலை பழனிசாலை, கொழுமம் பிரிவில் துவங்கி அனுஷம் நகர், ஐஸ்வர்யா நகர், பிடிஆர் நகர் வழியாக உப்பாறு ஓடையில் கலக்கிறது.இந்த ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகியது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும், மழைக்காலங்களில் அதிக தண்ணீர் செல்லும்போது, அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருந்தது. இதனால், இந்த ஓடையை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உடுமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை தூர் வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.
ஓடையில் வளர்ந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் தேங்காமல் சீராக செல்கிறது. கொசுத்தொல்லையும் இல்லை. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. ஓடையை தூர் வாரி சீரமைத்த நகராட்சி தலைவர் மத்தீன், ஆணையர் விநாயகன் மற்றும் பொறியாளர் சண்முகவடிவேலு ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.