கடமலைக்குண்டுவில் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலி அகற்றம்
இதுகுறித்து கிராம மக்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர், கோயிலுக்கு செல்லும் பாதை தனது பட்டா நிலத்தில் வருவதாகவும், அதனால் முள்வேலியை அகற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு காவல்நிலையம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் இது தொடர்பாக, கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து, நேற்று கடமலைக்குண்டுவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. மேலும், பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு தேனி பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிராம பொதுமக்களுடன் மீண்டும் ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர்கள் முஜிபுர் ரகுமான், ராஜசேகர், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோயிலுக்கு செல்லக்கூடிய முள்வேலியை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.