கடலாடியில் ரூ.7.50 கோடியில் ஐடிஐ
*முதல்வர் திறந்து வைத்தார்
சாயல்குடி : கடலாடியில் ரூ.7 கோடியே 50 லட்சம் நிதியில் கட்டப்பட்ட புதிய அரசு ஐ.டி.ஐ கட்டிடங்களை முதல்வர் நேற்று காணொலி மூலம் திறந்ததையொட்டி பயன்பாட்டிற்கு வந்தது.
கடலாடி ஒன்றிய பகுதியை சேர்ந்த கிராம மாணவர்களின் நலன்கருதி வனத்துறை மற்றும் கதர் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டின் பேரில், கடலாடியில் அரசு ஐ.டி.ஐ அமைக்க அரசு சார்பில் கடந்த 2022ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2022 டிச.1ம் தேதி முதல் கடலாடி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக புதிய அரசு ஐ.டி.ஐ இயங்கி வந்தது. இதில் பிட்டர், வயர்மேன், ஏ.சி மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசன் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுடன் வகுப்புகள் உள்ளது. இதில் சுற்றுவட்டார கிராமபுற மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையோரம் தொழிற்சாலை ஆய்வகத்துடன் கூடிய வகுப்பறை, அலுவலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய ஐ.டி.ஐ கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்தது.
இதனை நேற்று சென்னையில் இருந்து வேலை வாய்ப்பு மற்றும் புதிய அரசு தொழிற்பயிற்சித் துறையின் சார்பில் கடலாடி ஐ.டி.ஐயை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து, துவங்கி வைத்தார்.
கடலாடியில் ஐ.டி.ஐயில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் விளக்கேற்றி வைத்தார்.
இதில் உதவி இயக்குனர் சிவசுப்ரமணியன், ஐ.டி.ஐ முதல்வர்கள் ஜவகர்பாண்டியன், நாகரெத்தினம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், தாசில்தார் பரமசிவம், பி.டி.ஓக்கள் சங்கரபாண்டியன், ஜெயஆனந்த், மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் கணேஷ்பாண்டியன், அமைச்சர் உதவியாளர் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல், நகர செயலாளர் ராமசாமி, வர்த்தக சங்க தலைவர் ராமகிருஷ்ணன், கிராம முக்கியஸ்தர் முத்துமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் திருப்புல்லாணி ஒன்றியம் சுற்றுவட்டார கிராம மாணவர்களின் நலன் கருதி நடப்பாண்டிற்கு புதிய அரசு ஐ.டி.ஐ நேற்று திறக்கப்பட்டது. இதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மாணவர்கள் மற்றும் கிராமமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.