காடையாம்பட்டி அருகே வனத்தில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து வீட்டுமனைகள்
*கிராம மக்கள் குற்றச்சாட்டு
காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே, வனப்பகுதியில் உள்ள நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, வீட்டு மனைகள் அமைத்து வருவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் கிராமத்தில், குண்டுக்கல் ஏரி உள்ளது. வனப்பகுதியில் பெய்யும் மழையானது ஓமலூரான் ஓடை வழியாக குண்டுக்கல் ஏரிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, ஓடை ஓரத்தில் இருந்த பனைமரங்களை வெட்டி, வீட்டுமனைகளாக பிரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனால், 7 மீட்டர் அகலம் கொண்ட ஓமலூரான் ஓடை, தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, ஒரு மீட்டர் அகலம் மட்டும் உள்ளது.
மேலும், அப்பகுதியில் சிலர் ஓடையை தோண்டும் பணியை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து காடையாம்பட்டி தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர். குண்டுக்கல் ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையை முழுமையாக மீட்க வேண்டும்.
அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு அதிகப்படியான தண்ணீர் வனப்பகுதியில் இருந்து ஓமலூரான் ஓடை வழியாக வந்து, விவசாயத் தோட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்ற வீடியோவை ஆதாரங்களாக கொடுத்து புகார் அளித்துள்ளனர்.
மேலும், வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு, நீர்வழிப் பாதையை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.