கச்சிராயபாளையம் அருகே குரங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு
*வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சின்னசேலம் : கச்சிராயபாளையம் அருகே குன்று பகுதிக்கு அடிவாரத்தில் உள்ள அக்கராயபாளையம் பகுதி குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் வனத்துறையினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்கராயபாளையம் பெரிய குன்று மற்றும் அதை ஒட்டிய காடுகளில் மரங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் அழிக்கப்படுவதால் காடுகளில் உள்ள குரங்கு, மயில் போன்றவை ஊருக்குள் படையெடுக்கிறது. அவ்வாறு ஊருக்குள் வரும் குரங்குகள் உணவுப்பொருட்களை திருடுவது, மனித உடமைகளை சேதப்படுத்துவது, தோட்டத்தில் உள்ள காய்கறிகளை பறித்து தின்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் இந்த குரங்குகள் அக்கராயபாளையம் புதுகாலனி பகுதியில் தெருக்களில் விளையாடும் சிறுவர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்து வருகிறது. அதைப்போல மின்கம்பிகளில் தொங்கி விளையாடும் குரங்குகளால் மின்கம்பி அறுந்து சேதமடையும் சம்பவங்களும் நடக்கிறது.
இதனால் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதைப்போல குரங்குகள் உள்ள இடத்தில் சிறுவர்கள், பொதுமக்கள் உணவுப்பொருட்கள் வீசி எறிவதை தடை செய்ய வேண்டும் என்றும் குரங்குகளுக்கு தெரியும்படி உணவுப்பொருட்களை எடுத்து செல்வதை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தெருக்களில் வெறிநாய் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் சிறுவர்களை, மனிதர்களை கடித்து விடுகின்றன. இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்களையும் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.