கச்சிராயபாளையம்-சின்னசேலம் சாலையில் முட்செடிகளை அகற்ற வேண்டும்
*நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
சின்னசேலம் : சின்னசேலம்-கச்சிராயபாளையம் நெடுஞ்சாலையில் அக்கராயபாளையம் பகுதியில் தார் சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றுவதுடன், சாலையோரம் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம்-கச்சிராயபாளையம் நெடுஞ்சாலையில் கனியாமூர் கூட்ரோடு, தொட்டியம், நமசிவாயபுரம், எலியத்தூர், தெங்கியாநத்தம், கடத்தூர், அக்கராயபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இதனால் இச்சாலையில் தினசரி ஏராளமான பேருந்துகள், லாரிகள், கார், பைக், காகித ஆலைக்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
மேலும் இந்த சாலையில் அக்கராயபாளையம் முதல் கடத்தூர் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளது. குறிப்பாக அக்கராயபாளையம் ஆசாத் நடுநிலைப்பள்ளியின் எதிர்சாலை பகுதியில் இருந்து சாலையை ஆக்கிரமித்து முட்செடிகள் வளர்ந்து வருகிறது.
இந்த பகுதியில்தான் மாணவர்கள் சிறுநீர் கழிக்க செல்வார்கள். அப்போது அடர்ந்த செடிகளில் மறைந்துள்ள விஷபூச்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
சாலையோரம் செடிகள் வளர்ந்துள்ளதால் இப்பகுதியில் வாழும் மக்கள் சாலையிலேயே கழிப்பிடம் செல்கின்றனர். இந்த செடிகள் பல இடங்களில் தார்சாலையில் படர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.
இந்த செடிகள் வளர்ந்துள்ளதால் பஸ், லாரி வரும்போது, பல இடங்களில் பைக் ஓட்டிகள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அக்கராயபாளையம் காந்தி நகர் பகுதியில் சென்டர்மீடியன் ஓரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு செடிகள் வளர்ந்துள்ளது.
அதைப்போல சின்னசேலம்-கச்சிராயபாளையம் நெடுஞ்சாலையில் கடத்தூர் அருகே மழை காலத்தில் மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் இல்லை. ஆங்காங்கே தூர்ந்து போயும், ஆக்கிரமிப்பு செய்தும் காணப்படுகிறது.
இதனால் கடத்தூர் அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தார்சாலையில் மழைநீர் வழிந்தோடுகிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது.
ஆகையால், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கச்சிராயபாளையம் முதல் கனியாமூர் வரை சாலையின் இருபுறமும் உள்ள முட்செடிகளை அகற்றுவதுடன், மழைநீர் தார்சாலையில் செல்லாமல், கால்வாயில் வழிந்தோடும் வகையில் சாலையின் இருபுறமும் பொக்லைன் இயந்திரம் மூலம் அடைப்புகளை அகற்றி, கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலரும் உத்தரவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.