ஊடுபயிருக்கேற்ற காட்டுப்பொன்னி
நெல்லை ஊடுபயிராகப் போட முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள். நம்முடைய பாரம்பரிய நெல்ரகங்களில் பலதும் ஊடுபயிராகப் போட மிகச் சிறந்தவை. நெல்லை ஊடுபயிராகப் போடும்போது மண்ணின் உயிர்ச்சூழல் மேம்படுகிறது. களைகள் கட்டுப்படுகின்றன. முக்கியப் பயிரும் ஊடுபயிரான நெல்லும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று ஊட்டமூட்டிக்கொள்கின்றன. இதனால் இரண்டு பயிர்களுமே அமோக விளைசலைக் கொடுக்கின்றன. ஊடுபயிராக விளங்கும் நெற்களில் காட்டுப்பொன்னி முக்கியமானது.காட்டுப்பொன்னி என்ற பெயரே அதன் தனித்துவத்தையும் சிறப்பையும் சொல்லக்கூடியது. பொன்னி என்ற சொல்லுக்குத் தமிழில் பல மங்கல அர்த்தங்கள் இருக்கின்றன. காவிரியைப் பொன்னி நதி என்பார்கள். செல்வத்தின் வடிவான லட்சுமியை பொன்னி என்பார்கள். உணவு லட்சுமி கடாட்சமானது. மேலும், நெல் காவிரிக்கரையில் செழிப்பாக வளரக்கூடியது என்பதால் நெல்லுக்குப் பொன்னி என்ற பெயர் வந்திருக்கக்கூடும். அதிலும் எல்லா ரகங்களும் பொன்னி அல்ல. நடவு செய்தால் மகசூலை அள்ளிக்கொடுப்பதும்; அள்ளி உண்டால் உண்பவரின் நலனைக் காப்பதுமே பொன்னி ரகங்கள்.
காட்டுப்பொன்னியின் மேற்புறத் தவிட்டில் உள்ள அடர்த்தியான நார்ச்சத்து (Crude fiber) செரிமானத்துக்கு மிகவும் நல்லது. செரிமானக் கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்கள் இதை உண்ணலாம். காட்டுப்பொன்னியில் புரோட்டீன் எனும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. பொதுவாக, புரதச்சத்து அரிசி ரகங்களில் காணப்படாது. எனவே, சிறு குழந்தைகளும் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்களும் இதை உண்ணலாம். காட்டுப்பொன்னியின் கார்போஹைட்ரேட் சத்து ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே கரைக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. காட்டுப்பொன்னியில் கால்சியம் எனும் சுண்ணாம்புச்சத்தும் நிறைந்துள்ளது.
எலும்புகள், பற்கள் வலுவாக இருக்க கால்சியம் சத்து அவசியம். வயதானவர்கள், மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்கள் காட்டுப்பொன்னியில் கஞ்சிவைத்துப் பருகிவர கால்சியம் சத்து உடலில் சேரும். காட்டுப்பொன்னியின் வைக்கோலிலும் மிகச்சிறந்த சத்துக்கள் உள்ளன. கால்நடைகள் மிகவும் விரும்பி உண்ணும் இதில் ஏராளமான நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளதால் கால்நடைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.பொன்னி என்று பெயர் இருந்தாலும் காட்டுப்பொன்னி மானாவாரி, மேட்டுப்பகுதிகளிலும், நீர்வளம் மிகக் குறைந்த பகுதிகளிலும் பயிரிட மிகச்சிறந்தது. தென்னை, வாழை, சப்போட்டா போன்றவை சாகுபடி செய்யும் நிலங்களில் காட்டுப்பொன்னியை ஊடுபயிராக இடலாம். சராசரியாக, ஒரு மாதம் வரையிலும்கூட தண்ணீர் தேவை இல்லாமல் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய அற்புதமான போர்க்குணமிக்க தாவரம் இது. அதிகம் செலவில்லாமல் பயிரிட காட்டுப்பொன்னி மிகச் சிறந்த தேர்வு. காட்டுப்பொன்னியின் அரிசி சிவப்பு நிறத்தில், மோட்டா ரகமாக, தடிமனாக இருக்கும். 140 நாட்களில் பயிராகும் நீண்டகாலப் பயிர் இது. நோய் தாக்குதலைத் தாங்கியும் வளரக்கூடிய தன்மை உடையது.
காட்டுப்பொன்னியை ஊடுபயிராக மட்டும் இன்றி மானாவாரி நிலங்களில் சாதாரணமாகவும் வெள்ளாமை செய்யலாம். கடுமையான சூழலிலும் வளரக்கூடிய பயிர் என்பதால் அடியுரம் போடுதல் பூச்சிகொல்லிகள் பயன்படுத்துதல் போன்ற பராமரிப்புகள் ஏதும் இல்லாமலேகூட நன்றாக வளரக்கூடியது. ஒற்றை நாற்று முறையில் நடுவது என்றால் விதைகளை மிகச்சிறப்பாக விதை நேர்த்தி செய்தபிறகு, பாத்தி அமைத்து நட்டு பயிர்கள் துளிர்த்து வந்ததும் எடுத்து நடவு செய்யலாம். பாத்தி அமைக்கும்போதே விதைக்கும் வயலையும் தேர்வு செய்து பண்டுபடுத்துவது நல்லது. கோடை உழவு ஓட்டி தழைச் சத்து கொடுத்த பிறகு ஓருழவு ஓட்டி நடவு செய்யலாம். உரமிடுவது என்றால் அடியுரம் இட்ட பதினைந்து அல்லது இருபது நாட்களில் மேலுரமிட்டுப் பராமரிக்கலாம். நடவு செய்த பதினைந்தாவது நாளில் களை எடுக்க வேண்டியது அவசியம்.
பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படாது. அவசியம் எனில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகை அட்டை வைக்கலாம். ஊடு பயிராகப் பயிரிடுவது என்றால் விதை நேர்த்தி மட்டும் செய்தாலே போதுமானது. எந்தவிதமான பராமரிப்பு இன்றியும் மிகச் சிறப்பாக வளரக்கூடியது. காட்டுப்பொன்னிக்கு நீர்வளம் அதிகம் தேவை இல்லை என்பதால் ஓரளவு காய்ச்சலும் பாய்ச்சலுமான நீரே போதுமானது. காட்டுப்பொன்னி சராசரியாக ஏக்கருக்கு 20 மூட்டை வரை மகசூல் கொடுக்கக்கூடியது. அறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் கூடி, நுண்ணுயிரின் வளம் பெருகுவதாகவும், மேலும் மண்புழு எண்ணிக்கை அதிகரித்து மகசூல் பெருக்குவதாகவும் கூறப்படுகிறது.