ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்
*பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி : ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிாி மாவட்டம், ஊட்டி எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகிறோம். குடிநீர் வழங்க கூடிய ஆதாரமான கிணறு தூர்வாரப்படாமல் உள்ளது. நீர்த்தேக்க தொட்டி தரைதளம் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனால் குடிருக்காக கடும் சிரமப்பட்டு வருகிறோம். கழிவுநீர் செல்ல ேபாதிய கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். குடிநீர் ஆதாரமான கிணற்றை தூர்வார வேண்டும். கழிவுநீர் சீராக செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.