நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நடவடிக்கை தொடக்கம் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் விசாரணை குழு அமைப்பு: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், முறையற்ற நடத்தையால் நீதித்துறைக்கு களங்கம் விளைவித்த யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் பலர் முன்மொழிவை வழங்கினர். இதன் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, எம்பிக்களின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை நேற்று தொடங்கினார்.
அவையில் அவர் கூறுகையில், ‘‘நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி ரவிசங்கர் பிரசாத், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட முன்மொழிவு ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968, பிரிவு 3(2)ன்படி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது விரைவில் விசாரணை அறிக்கையை வழங்கும். அதுவரையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும். மேலும், ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என்பதை நாட்டின் மக்களுக்கு உரத்த குரலில் மக்களவையில் இருந்து பதிவு செய்கிறோம்’’ என்றார்.