நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கரூர் சம்பவம் தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசாணை வெளியீடு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விபத்து குறித்து நீதிபதி அருணா ஜெகதேசன் தலைமையில் விசாரணை ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் நேற்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அரசிதழில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் பிரசார கூட்டத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக அரசியல் மற்றும் சமூக அளவில் பெரும் அதிர்வுகள் எழுந்த நிலையில், அரசு சட்டபூர்வமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுத்தது.
இதனையடுத்து, அரசு விசாரணை ஆணையத்தை அமைத்து அறிவிக்கப்பட்டது. இந்த ஆணையமானது விபத்து நிகழ்ந்த துல்லியமான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்தல், விபத்திற்கு வழிவகுத்த தவறுகள் யாவை? யார் பொறுப்பு? என்பதைக் கண்டறிந்தல், அந்த நிகழ்வுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் அவற்றின் நடைமுறை பின்பற்றல் நிலையை பரிசீலித்தல், அரசியல் கட்சிகள் கூட்டம் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை ஆராய்தல், எதிர்காலத்தில் இவ்வாறு மக்கள் உயிரிழக்கும் நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை இந்த ஆணையம் முன்வைக்க வேண்டும். மேலும் இந்த விசாரணை ஆணையம், 3 மாதங்களுக்குள், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த விசாரணை ஆணைக்கு கமிஷன்ஸ் ஆப் இன்குவைரி சட்டத்தின் கீழ் முழுமையான சட்ட அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், குற்றவாளிகளை விசாரணைக்கு அழைப்பது, ஆவணங்கள் கோருவது, சாட்சிகளை விசாரித்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஒரு நேர்மையான, விரிவான விசாரணையை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்னெடுக்க வேண்டிய பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.