சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானு கேரளா ஐகோர்ட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் நீதிபதி நிஷா பானு. சீனியாரிட்டியில் 4வது இடத்தில் இருப்பவர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்தவர். தற்போது, இவரை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அதே போல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். இதற்கான பரிந்துரையையும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
நேற்று நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் மொத்தம் 14 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலிஜிய கூட்டத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு ஜெலிஜியத்தில் உறுப்பினராக இருந்த மூத்த நீதிபதி நாகரத்னா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி விபுல் பஞ்சோலி சீனியாரிட்டி பட்டியலில் 57வது இடத்தில் இருக்கும் நிலையில் அவரை விட தகுதிவாய்ந்த சீனியர் நீதிபதிகளில் ஒருவரை பரிந்துரைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எதிர்ப்பு தெரிவித்தது உயர் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.