நீதியரசர் சந்துரு குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: செல்வப்பெருந்தகை கண்டனம்
இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். நீதியரசர் சந்துரு குறித்து, பாசிச போக்கு கொண்ட அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை. கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து, நான் கன்னட மக்களுக்காகத் தான் பேசுவேனே தவிர, நான் சார்ந்த தமிழர்களுக்காக பேச மாட்டேன் என பகிரங்கமாக மேடையில் பேசிய தமிழின விரோதி தான் அண்ணாமலை. நீதியரசர் உள்ளிட்ட எவர் மீதாவது அவதூறு சேற்றை நாள்தோறும் வாரி இறைத்து அதன்மூலம் ஊடக வெளிச்சம் பெற்று பரபரப்பு அரசியலை செய்து வருகிறார்.
கடந்த காலங்களில் இத்தகைய அரசியலை மேற்கொண்டவர்கள் படுகுழிக்கு தள்ளப்பட்டதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். சந்துரு நீதியரசராக இருந்து வழங்கிய தீர்ப்புகளின் கருத்துகளின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற புத்தகத்தை தபால் மூலமாக அனுப்புகிறேன். அந்நூலை அண்ணாமலை படித்து நீதிபதி சந்துரு பற்றி முழுமையாக புரிந்து கொண்டு கருத்துகளை கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.