இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கு தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்: மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவு
மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது: ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம். 2025, ஆக.10ல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித்தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இது மொழி உரிமை மீதான தாக்குதல். ஒன்றிய அரசுத்துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல். இந்தித் திணிப்பும், தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.