ஜூனியர் உலக ஹாக்கி அப்பாடா... வென்றது ஜப்பான்: திரில்லரில் சீனா போராடி தோல்வி
சென்னை: உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. சென்னையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் ஜப்பான் - சீனா அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், போட்டியின் 11வது நிமிடத்தில் சீன வீரர் நிங் டோங்ஜுன் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். அதற்கு பதிலடியாக, ஜப்பான் வீரர்கள் ஹரா ஷுன், ஒனோ ஷு, டெராசகா கஸுகி , போட்டியின் 19, 20, 50வது நிமிடங்களில் தலா ஒரு கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினர்.
57வது நிமிடத்தில் சீனாவின் ஜாங் ஜியாலியாங் ஒரு கோல் போட்டார். அதனால், 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மதுரையில் நடந்த முதல் போட்டியில், நமீபியா அணி, 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது. 2வதாக நடந்த போட்டியில், அட்டகாசமாக ஆடி கோல் மழை பொழிந்த இங்கிலாந்து அணி, 13-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை நசுக்கி வெற்றிவாகை சூடியது.