ஜூலை 18; தமிழ்நாடு நாள் விழா' கொண்டாட்டம்: தமிழ் அறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி
சென்னை: ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா' கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ் அறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இவ்விழா நடைபெற உள்ளது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் நாளை (18.07.2025) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில் பேரறிஞர் அண்ணாவும் தமிழும்' என்ற தலைப்பில் வக்கீல் த.ராமலிங்கம், 'இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளார். தொடர்ந்து அமைச்சர் அவர்கள் , அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வரவேற்புரையாற்றுகிறார். செயலர் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப் பேச உள்ளார்.