நீதிபதி குறித்து மனுவில் அவதூறாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து மனுவில் அவதூறாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், குஜராத் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பு வழங்கியதற்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சூழலில், நீதிபதிகளின் மாண்பைக் காக்கும் வகையில் தலைமை நீதிபதி மீண்டும் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில், இடமாற்ற மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது அவதூறான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதைக் கண்டு கடும் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி, ‘உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல. இருவருமே இந்திய அரசியலமைப்பின் கீழ் தான் பணியாற்றுகிறோம். உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கவோ அல்லது திருத்தவோ முடியுமே தவிர, உயர் நீதிமன்றங்களின் மீது உச்ச நீதிமன்றம் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்று அர்த்தமல்ல’ என விளக்கமளித்தார்.
தொடர்ந்து, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியிடம், மனுவில் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். நீதிபதிகள் மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பாதுகாப்பது உச்ச நீதிமன்றத்தின் கடமையாகும் எனவும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியாகத் தெரிவித்தார்.