ஆம்ஸ்ட்ராங் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,” இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும்தான் உண்மை வெளிவரும்.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதேபோன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையில் ஆஜரான தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ஒரு முறையீட்டை நேற்று முன்வைத்தார். அதில், ‘‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அமைத்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான வழக்கை நவம்பர் 14ம் தேதி விசாரிப்பதாகவும், பட்டியலில் இருந்தும் நீக்கப்படாது என உத்தரவு பிறப்பித்தனர்.