பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்: குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர்
சென்னை: பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், அமைச்சர்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலியினை தொடங்கி வைத்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் நல நிதியம் திட்டத்தின் கீழ் மருத்துவ நிதியுதவி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் காசோலையை பத்திரிகையாளர் கே.செந்தில்நாதன் மகனிடம் வழங்கினர்.
மருத்துவ முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம், இசிஜி, எக்ஸ்-ரே, எக்கோ, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மருத்துவ முகாமில் இடம் பெற்றிருக்கிறது. விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 ஆயிரம் ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற வகையில், நிதிநிலை அறிக்கையில் அறிவித்தற்கு ஏற்ப 1414 அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது TAEI மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்க, புதியதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி (TAEI Registry 2.0) தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கணினி மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு 108 அவசரகால ஊர்தி வாகனத்தில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது, எனவே நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் சிகிச்சை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் வழிமுறைகளின் அடிப்படையில் சிறப்பான சிகிச்சை வழங்கிடவும் வழி வகுக்கும். தற்போது 113 TAEI மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (பொறுப்பு) அமுதவல்லி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி, திட்ட இயக்குநர் தமிழ்நாடு சுகாதார திட்டம் டாக்டர் எஸ்.வினீத், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று, பல்வேறு வகையான உடல் பரிசோதனைகளை செய்து பயன் அடைந்தனர்.