உ.பி-யில் பத்திரிகையாளர் படுகொலை: தப்ப முயன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு
பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி காவல் துறையினருடனான மோதலில் சுட்டுப்பிடிக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண் சிங் (54). பப்பு என்று அழைக்கப்படும் இவர், பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கின் மருமகன் ஆவார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஹர்ஷ் ஓட்டல் அருகே லக்ஷ்மி நாராயண் சிங் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொலையில் விஷால் என்பவரே முக்கிய குற்றவாளி என்பதை உறுதி செய்தனர்.
அவர் குல்தாபாத்தில் உள்ள மச்சிலி பஜாரில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று இரவு குற்றவாளி விஷால் பதுங்கியிருந்த இடத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த மோதலில், விஷாலின் காலில் துப்பாக்கியால் சுட்டு காவல் துறையினர் அவரை கைது செய்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்புடைய மற்ற இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.