ஜோலார்பேட்டை அருகே இன்ஜின் கோளாறு நடுவழியில் 2 முறை நின்ற வந்தே பாரத்: சென்னை ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்
ஜோலார்பேட்டை: சென்னைக்கு வந்த வந்தேபாரத் ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் 2 முறை நின்றதால், சென்னை ரயில்கள் 3 மணிநேரம் தாமதமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர். கர்நாடக மாநில மைசூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் 4.40 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் ரயில்வே ஸ்டேஷனை கடந்து வந்தது. அப்போது திடீரென ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது.
உடனே ரயில் இன்ஜின் டிரைவர் இன்ஜின் கோளாறை தற்காலிகமாக சரி செய்து இயக்கினார். ஆனால் அடுத்த 15 நிமிடத்தில் சோமநாயக்கன்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே மீண்டும் கோளாறு ஏற்பட்டுநின்றது. இதுகுறித்து இன்ஜின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று வந்தே பாரத் ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வந்த புவனேஷ் எக்ஸ்பிரஸ் , பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கிட்டதட்ட 2 மணி நேரம் கடந்தும் ரயில் இன்ஜினை சீரமைக்க முடியாததால் பெங்களூரில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் கொண்டுவரப்பட்டு வந்தே பாரத் ரயிலுடன் இணைத்து ரயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கினர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி ரயில்கள் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.