ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோராய் வென்ற ஜோகோவிச்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த முன்னாள் நெம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்), அமெரிக்காவின் லேர்னர் டியன் (19 வயது, 50வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் ஜோகோவிச் 2 மணி 25 நிமிடங்களில் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றதால் 2வது சுற்றில் விளையாட உள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பென் ஷெல்டன், டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா), ஜோர்டன் தாம்சன்(ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றனர்.
அதேநேரத்தில் யுஎஸ் ஓபனின் முன்னாள் சாம்பியன் ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ் (29 வயது, 13வது ரேங்க்)), பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஸி (29 வயது, 51வது ரேங்க்) ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்தனர். அதில் முன்னாள் நெம்பர் ஒன் வீரரான மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியை தழுவினார். மொத்தம் 3 மணி 45 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் வென்ற பெஞ்சமின் இதுவரை யுஎஸ் ஓபனில் முதல் சுற்றில் தோற்றதில்லை. முன்னாள் சாம்பியன் 2வது முறையாக முதல் சுற்றுடன் நடையை கட்டியுள்ளார்.