இணை ஆணையரிடம் வாக்குவாதம்; கோயம்பேடு உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை: பொது இடத்தில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி ஆணையரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில், சிட்டி யூனியன் வங்கியின் நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். இதையொட்டி, ேகாயம்பேடு உதவி ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் நந்தம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதில் சில குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேற்கு மண்டல இணை ஆணையர் திசா மிட்டல் அங்கிருந்த உதவி ஆணையர் சரவணனிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது, அவர் இணை ஆணையர் திசா மிட்டலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னை காவல் ஆணையர் அருண், பொது இடத்தில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.