வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் மீது வழக்கு
திருச்சி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம், கடந்த 2019 ஜனவரி மாதம் திருச்சி பொன்மலை கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்வதாக கூறி அறிமுகமானார். பின்னர் ரயில்வே மற்றும் காவல்துறையில் கோபிநாத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய கோபிநாத், மோகன்ராஜ் மற்றும் இவரது கூட்டாளியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதியிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்த சுகந்தி ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோபிநாத், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுகந்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.