ஜார்க்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கு சொந்தம்: முதல்வர் ஹேமந்த் திட்டவட்டம்
சாய்பாசா: ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கு சொந்தமானது, அவர்கள்தான் ஆளுவார்கள் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சோடாநாக்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் சோரன், ‘‘நாம் தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக போராடினோம். நமது உரிமைகளை பெறுவதற்கும் நாம் போராடுவோம். ஜார்க்கண்ட் பழங்குடியினருக்கு சொந்தமானது என்பதால் இங்கு பழங்குடியினர் தான் ஆட்சி செய்வார்கள்.
மாநிலத்தில் எந்த ஒரு இந்துவும் ஆபத்தில் இல்லை. ஆனால் பாஜ இந்து-முஸ்லிம் கதைகளுடன் மோதலை உருவாக்குவதற்கு மட்டுமே முயற்சித்து வருகின்றது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையுடன் இணைந்து பாஜ என்னை மிரட்டி வருகின்றது. என் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர். ஆனால் நான் ஜார்க்கண்ட் மண்ணின் மகன். நான் பயப்படவும் இல்லை. யாருக்கும் தலை வணங்கவும் இல்லை” என்றார்.