குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் கல்வி அமைச்சர் மரணம்
ராஞ்சி: குளியலறையில் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்த ஜார்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரன், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், மாநில கல்வி அமைச்சருமான ராம் தாஸ் சோரன் (62), கடந்த 2ம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக ஜாம்ஷெட்பூரில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூத்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று அவரது உடல் விமானம் மூலமாக ராஞ்சி கொண்டுவரப்பட்டது. அங்குள்ள சட்டமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட பதிவில், ‘ராம்தாஸ் சோரனின் மறைவு நம்மை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.